search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு நம்பர் லாட்டரி சீட்டு"

    சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்தபோது அவர்களிடம் இருந்து, ரூ.95 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பிராட்வே:

    சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செசங் சாங் தலைமையிலான தனிப்படையினர், அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 40), என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனையிட்டனர். அதற்குள் ஏராளமான ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளும், ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும் இருந்தது. போலீசார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கொத்தவால் சாவடி, நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்(40) என்பவருக்கு, அந்த பணத்தை கொடுக்க இருந்ததாக சங்கரலிங்கம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நரேஷ் வீட்டுக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

    மேலும் போலீசார் சோதனையிட்டதில் அந்த வீட்டில் ரூ.95 லட்சம் ஹவாலா பணமும் சிக்கியது. அதை பறிமுதல் செய்த போலீசார் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர். நரேசும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு நம்பர் லாட்டரி விற்ற வழக்கை, வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    ×